Tuesday, June 23, 2009

மாயையைப் பழித்தல் ராகம்-காம்போதி

தாளம்-ஆதி

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ !-மாயையே! 1

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே-நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே! 2

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர்-மாயையே! 3

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்!-மாயையே! 4

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே! 5

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே! 6

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே! 7

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே! 8

No comments:

Post a Comment