(காப்பு-பரம்பொருள் வாழ்த்து)
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;
அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நூல்
அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.
ஈகை திறன்.
உடலினை உறுதிசெய். 5
ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம். 10
ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல். 15
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலும் துணிந்துநில். 20
கைத்தொழில் போற்று.
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டு வாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள். 25
சாவதற்கு அஞ்சேல்.
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று. 30
செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ். 35
சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வத தருளின். 40
ஞேயங் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க்கு அஞ்சேல். 45
துன்பம் மறந்திடு.
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என்றுணர்.
தேசத்தைக் காத்தல்செய்.
தையலை உயர்வு செய். 50
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய். 55
நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல். 60
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு. 65
பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல். 70
பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை. 75
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல். 80
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல். 85
யவனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில். 90
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர். 95
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ். 100
(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு. 105
வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு. 110
Tuesday, June 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment