Monday, June 22, 2009

எங்கள் நாடு

ராகம் - பூபாளம்

மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

No comments:

Post a Comment